108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவசர கால மருத்துவ பணியாளர்களுக்கும் தலா ரூ. 5,000 நிவாரண உத்தரவு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நெல்லை, ஆகஸ்ட்-7

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ரூ.208.30 கோடியில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 2,800 பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முடிவுற்ற ரூ.32.30 கோடி மதிப்பிலான 20 திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என்றும் அவசர கால மருத்துவ பணியாளர்களுக்கும் தலா ரூ. 5,000 நிவாரண உத்தரவு வழங்கப்படும் என்றும் அறிவித்தார். சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு வரைவு குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதனைபோல், புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அமைக்கும் குழுவின் அறிக்கை அடிப்படையில் கல்வி கொள்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

பயிர் காப்பீட்டு திட்டத்தின் .கீழ் விவசாயிகளுக்கு ரூ.8,000 கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மருத்துவக் கல்லூரியில் கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்காக 100 இடங்களை அதிகரிக்கப்பட்டுள்ளன. நெல்லையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற ரூ.1000 கோடியில் திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. ராதாபுரம் கால்வாய் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் குடிமராத்துப் பணிகள் நிறைவடையும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *