தங்கம் விலை சவரனுக்கு ரூ.43 ஆயிரத்தை தாண்டியது..!!
தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து சவரன் 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னை, ஆகஸ்ட்-7

கொரோனாவால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதிலும், தங்கம் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.37,616க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறையாமல் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. தொடர்ச்சியாக 17வது நாளாக நேற்று ஒரு கிராம் ரூ.5,374க்கும், சவரன் ரூ.42,992க்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 18வது நாளாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது கிராமுக்கு ரூ.46 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5420க்கும், சவரனுக்கு ரூ.368 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,360க்கும் விற்கப்பட்டு வருகிறது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்சம் என்ற சாதனையை படைத்துள்ளது. சென்னையில் கடந்த 38 நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 6,480 வரை உயர்ந்துள்ளது. தற்போது தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை கடந்துள்ளது நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை உயர்ந்து வரும் அதே வேகத்தில் வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி கிராமிற்கு ரூ.2.20 காசுகள் அதிகரித்து ரூ.83.80க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.83,800 ஆக உள்ளது.