தமிழகம் முழுவதும் ஆக.10-ம் தேதி நடைபெறவிருந்த கடையடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு… விக்கிரமராஜா

தமிழகத்தில் வரும் 10ந்தேதி நடக்க இருந்த கடையடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-7

கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் கோயம்பேடு வணிக வளாகத்தை திறப்பதற்கு உரிய நடவடிக்கையை துரிதப்படுத்தி, 24 மணி நேரமும் சுதந்திரமாக இயங்கிட அனுமதி அளிக்க வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்த்திட வணிக வளாக சுற்றுப்பாதையை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும். மேலும் வாரத்திற்கு ஒருமுறை வணிக வளாகத்திற்கு கட்டாய விடுமுறை அளித்து சுத்தப்படுத்தி சுகாதாரமாக வைத்துக்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, கோயம்பேடு வணிக வளாகத்தை திறக்க வேண்டும். திறக்க நடவடிக்கை எடுக்காவிடில், முதல் கட்டப் போராட்டமாக வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காய்கறி, பூ, பழம் மார்க்கெட் மற்றும் கடைகள் அனைத்தும் கோயம்பேடு வணிக வளாகம் திறப்பதற்கு ஆதரவாக முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறவிருந்த கடை அடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:-

தமிழகத்தில் வரும் 10ந்தேதி நடக்க இருந்த மார்க்கெட் மூடல், கடையடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க ஏற்பாடு செய்வதாக அரசு உறுதியளித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ணஜெயந்தி வர இருப்பதாலும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *