ரூ.1000 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன.. நெல்லையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.!!!

ரூ.1000 கோடி செலவில் பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, ஆகஸ்ட்-7

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ரூ.32.30 கோடி மதிப்பில் முடிவுற்ற 20 திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் ரூ.208.30 கோடி மதிப்பில் 8 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,800 பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர், முதல்வர் தலைமையில் திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களுக்கான கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, கொரோனா பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குணமடைவோர் சதவீதம் அதிகம்; இறப்பு விகிதம் குறைவு.தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்கள், நோயாளிகளை காக்க, பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. விவசாயிகள், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் புதிய தடுப்பணைகளை அரசு கட்டி வருகிறது. விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டப் பணிகளை அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
ரூ.1000 கோடி செலவில் பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. எம்எல்ஏ.க்கள் கோரிக்கையை ஏற்று தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. தாமிரபரணி-கருமேனியாறு இணைப்பு திட்டத்தின் தாமதத்திற்கு நிலம் கையப்படுத்தும் பணியே காரணம். மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு இ-பாஸ் நடைமுறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *