கோவையில் கொட்டும் மழையில் வெள்ளப் பகுதிகளில் அமைச்சர் S.P. வேலுமணி ஆய்வு

கோவை, ஆகஸ்ட்-7

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம், சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து விடியவிடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், செம்மேடு உக்குளம், பேரூர் செட்டிபாளையம் சொட்டையாண்டி குளம், கங்க நாராயண சமுத்திரகுளம், பேரூர் பெரியகுளம் உள்ளிட்ட நொய்யல் வழியோர கிராமங்களில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சித்திரைச்சாவடி, குனியமுத்தூர் தடுப்பணை, சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை, புட்டுவிக்கி தடுப்பணை உள்ளிட்ட தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன.

இதேபோல் நொய்யல் ஆற்றின் கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிது. இதையடுத்து தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி, மழை வெள்ளம் பாய்ந்தோடும் குளங்கள்,வாய்க்கால்களை உடனடியாக கண்காணிக்கவும், நீர் பாதையை அடைக்கும் புதர்களை அகற்றவும் உத்தரவிட்டார்.இந்தப் பணிகள் நடைபெற்றதைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, போத்தனூரில் உள்ள நொய்யல் ஆறு பகுதி, புட்டு விக்கியில் உள்ள நொய்யல் ஆற்றாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கொட்டும் மழையில் நனைந்தபடி ஆய்வு மேற்கொண்டார்.

வெள்ளம் பாய்ந்தோடும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து குறிச்சிக்குளம் வாய்க்காலையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார்.

கரையோரப் பகுதிகளை வலுப்படுத்த போதுமான முன்னேற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக கோவை மதுக்கரை பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *