தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்; எஸ்.வி.சேகர் வழக்கு வந்தால் ஓடி ஒளிவார்.. முதல்வர் அதிரடி..!
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும். எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார். வழக்கு என வந்தால் ஒளிந்து கொள்வார். நாங்கள் எல்லாம் பதில் அளிக்கும் அளவிற்கு எஸ்.வி.சேகர் பெரிய தலைவர் இல்லை. நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவிற்கு வந்தால் ஏற்க தயார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல், ஆகஸ்ட்-6

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திண்டுக்கல் சென்றார். திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.69 கோடியில் 42 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 3,500 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.88 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.மேலும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து, விவசாய பிரதிநிதிகள், சுய உதவிக் குழுவினருடன் ஆலோசனை நடத்தியப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாய பிரதிநிதிகள், சுய உதவிக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினேன். அரசு நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர் என்றார். 43,528 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுக்க படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைய உள்ளது. கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைய உள்ளது. புதிய கலை அறிவியல் கல்லூரி துவக்கப்படும். உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 28 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகம். தமிழகத்தில் இதுவரை 2.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் சிறப்பு குறைதீர்ப்பு திட்டம் மூலம் 9,105 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மக்களின் நீண்டநாள் கனவான மருத்துவக் கல்லூரி விரைவில் அமைய உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு குறைதீர்ப்பு திட்டம் மூலம் 3 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாடு ஒப்பந்தம் மூலம் திண்டுக்கல்லில் 400 பேருக்கு வேலை வழங்கும் வகையில் தொழில் தொடங்கப்பட்டுள்ளது. 2019 முதலீட்டாளர் மாநாடு மூலம் 3 நிறுவனங்கள் ரூ.300 கோடியில் திண்டுக்கல்லில் தொழில் தொடங்க உள்ளன. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்; அதில் மாற்றமில்லை. இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த மாவட்டங்களில் கூடுதலாக ஒரு குழு என 2 குழு அமைக்கப்பட்டுள்ளது. பாஜகவை விட்டு நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம்.
எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார். வழக்கு என வந்தால் ஒளிந்து கொள்வார். நாங்கள் எல்லாம் பதில் அளிக்கும் அளவிற்கு எஸ்.வி.சேகர் பெரிய தலைவர் இல்லை. முதலில் அவர் எந்த கட்சியை சேர்ந்தவர்? பாஜகவை சேர்ந்தவரா? அப்படியானால் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவே இல்லையே. லோக்சபா தேர்தலின்போது அதிமுக மற்றும் எங்களுடைய கூட்டணியைச் சேர்ந்த பாஜக இணைந்து தேர்தலை சந்தித்தோம். அப்போது எங்கேயுமே அவர் பிரச்சாரத்திற்கு வரவில்லை. முன்பு அவர் அதிமுகவில்தான் இருந்தார். அதிமுகவைதான் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். சரியான முறையில் கட்சிக்கு ஒத்துழைப்பு தராத காரணத்தால், ‘அம்மா’ அவரை நீக்கினார். எனவே அவருக்கு பதில் சொல்லதேவையில்லை.
இவ்வாறு முதல்வர் கூறினார்.