சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது.. சுங்கத் துறை அதிகாரிகள் விளக்கம்..!
சென்னை துறைமுகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக சுங்கத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை, ஆகஸ்ட்-6

லெபனான் நாட்டில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இது நேற்று முன் தினம் வெடித்து சிதறியதில் 100 பேர் பலியாகிவிட்டனர். 4000 பேர் காயமடைந்தனர். 2 லட்சம் பேர் வீடுகளை இழந்துவிட்டனர். இந்த நிலையில் சென்னை துறைமுகத்திலும் அம்மோனியம் நைட்ரேட் ரசாயனம் வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது;-
6 ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் மணலி சுங்கத்துறை கிடங்கில் பாதுகாப்பாக உள்ளது. துறைமுகத்தில் ஒவ்வொரு சரக்குக்கும் தனித்தனியாக பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அந்த நடைமுறையைத்தான் அம்மோனியம் நைட்ரேட்டுக்கும் பின்பற்றுகிறோம். அம்மோனியம் நைட்ரேட்டை வைத்திருக்கும் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பு நடைமுறைகளை பலப்படுத்தியுள்ளோம். லெபனானில் நடந்ததைப் போன்ற விபத்து சென்னையிலும் ஏற்படுமோ என்ற அச்சம் பலருக்கும் எழுந்துள்ளது. அதனால், சுங்கத் துறை அதிகாரிகள் இத்துறை சார்ந்த நிபுணர்களுடன் சேர்ந்து அம்மோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
மணலியில் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருக்கும் கிடங்கைச் சுற்றி குடியிருப்புகள் எதுவும் இல்லை என்பதால் மக்கள் யாரும் அச்சம் அடையத் தேவையில்லை. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மின்னணு ஏல முறையில் அம்மோனியம் நைட்ரேட் ஏலம் விடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.