மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது?.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்..!!

அரசின் அறிவுரையை கடைபிடித்தால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திண்டுக்கல், ஆகஸ்ட்-6

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.69 கோடியில் 42 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.88 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மகளிர் திட்டம் சமூக நலத்துறை தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 2 கோடியே 96 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட துறை அலுவலர்களுடன் வளர்ச்சி பணிகள் மற்றும் நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது ;-

சிறப்பான பணியை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 43,578 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் படிப்படியாக கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படுகிறது. அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றினால், நோய் பரவலை குறைக்க முடியும். தடுப்பு மருத்தே இல்லாத சூழலில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குணமடைவோர் சதவீதம் அதிகம்; இறப்பு விகதம் குறைவு என்றார். தடுப்பு மருந்து இல்லாத சூழலில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம். மருத்துவர்களுக்கு தேவையான உபகரணங்கள் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா காலத்திலும் தமிழகத்தில் வேளாண் பணியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் பல நிறுவனங்கள் தொழில் தொடங்கின. இதுவரை 3 நிறுவனங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களை நிறுவியுள்ளன. நூற்பாலைகள் அதிகம் இருப்பதால் வேலைவாய்ப்பு பெருகியுள்ள மாவட்டமாக திண்டுக்கல் உள்ளது. பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் பல தடுப்பணைகள் கட்டும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி, தொடர்ந்து 3 மாதம் விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை விலையில்லா கூடுதல் அரிசி வழங்கப்படுகிறது.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *