குஜராத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலி.. பிரதமர் மோடி இரங்கல்..!!

குஜராத் மாநிலத்தின் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் கொரோனா ஐ.சி.யூ வார்டில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளிகள் உயிரிழந்தனர். அகமதாபாத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத், ஆகஸ்ட்-6

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நவ்ரங்பூரா பகுதியில் உள்ள ஷீரா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் அந்த மருத்துவமனையில் ஐ.சி.யூ வார்டில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.

சுமார் 40 கரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார். மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இதனிடையே, தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், அகமதாபாத்தில் ஏற்பட்ட சோகமான மருத்துவமனை தீ விபத்தில் வருத்தம் அளிக்கிறது. துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். விபத்தின் நிலைமை குறித்து முதல்வர் விஜய் ருபானி மற்றும் மேயரிடம் பட்டேலிடம் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்வாகம் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *