ஜம்மு-காஷ்மீரின் 2-வது துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்.. ஜனாதிபதி உத்தரவு.!!!

ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீநகர், ஆகஸ்ட்-6

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு 3 மாதங்கள் கழித்து அக்டோபர் 31-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் முதல் துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா மர்மு நியமனம் செய்யப்பட்டார். கிரிஷ் சந்திர முர்மு குஜராத் மாநிலத்திலிருந்து 1985-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வானார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் மோடியின் முதன்மை செயலாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, 9 மாதங்களுக்கு மேலாக காஷ்மீர் துணை நிலை ஆளுநராக பணியாற்றி வந்த கிரிஷ் மர்மு நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பான கடிதத்தை ஜனாதிபதியிடம் அளித்தார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக கிரீஷ் சந்திர மர்முவின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, மனோஜ் சின்ஹாவை புதிய துணை நிலை கவர்னராக நியமனம் செய்துள்ளார் என தெரிவித்துள்ளது.

மனோஜ் சின்ஹா பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 2014-2019 அமைச்சரவையில் ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் இணை அமைச்சராக பணியாற்றினார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 61 வயதான மனோஜ் சின்ஹா காசியாப்பூர் மக்களவை எம்.பி.யாக மூன்று முறை தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *