அயோத்தியில் ராமர் கோயில்.. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..!!

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். 29 வருடங்களுக்கு பிறகு அயோத்தி சென்ற பிரதமர் மோடி, ராமஜென்ம பூமிபூஜையில் 40 கிலோ எடை கொண்ட வெள்ளியில் செய்யப்பட்ட செங்கல்லை அடிக்கல் நாட்டியுள்ளார்.

அயோத்தி, ஆகஸ்ட்-5

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலை அமைப்பதற்கு கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து அங்கு கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ராமர் கோயில் கட்டுவதற்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கோயில் மாதிரி வரைபடத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு கோயில் கட்டப்படுகின்றது. கோயில் கட்டுமான பணிகளை தொடங்கும் வகையில் அடிக்கல் நாட்டு விழா இன்று நடத்த அறக்கட்டளை திட்டமிட்டது. இதன்படி, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட அழைப்பு விடுக்கப்பட்டது.

ராம ஜென்மபூமி அறக்கட்டளை அழைப்பினை ஏற்ற பிரதமர் மோடி, இன்று காலை 9.30 மணியளவில் டெல்லியிலிருந்து உத்திரப்பிரதேசம் புறப்பட்டார். தொடர்ந்து. 10.30 மணியளவில் லக்னோ விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் அயோத்தியில் விழா நடக்கும் இடத்திற்கு அருகே ஹெலிபேட் தளத்தில் 11.30 மணியளவில் தரையிறங்கினார். அங்கு, பிரதமர் மோடிக்கு தனிமனித இடைவெளி பின்பற்றப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. 29 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக அயோத்திக்கு வந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

அயோத்தி வந்தவுடன் முதலில் அனுமன் கர்கி கோயிலுக்கு சென்று அனுமனுக்கு தீப ஆராதனை செய்து பிரதமர் மோடி, வழிபாடு செய்தார். அனுமன் கோவிலில் பிரதமர் மோடிக்கு வெள்ளி கிரீடம், சால்வை அணிவிக்கப்பட்டது. பின்னர், 12 மணியளவில் ராம பூமியில் குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரையில் விழுந்தும், தீப ஆராதனை செய்தும் தரிசனம் செய்தார். மேலும் ராமஜென்ம பூமி வளாகத்தில் பாரிஜாத பூ செடியை நட்டு வைத்தார்.

இதனை தொடர்ந்து, 12.15 மணியளவில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா தொடங்கியது. அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார்.

இதில், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல், ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும், ஆர்.எஸ்.எஸ். துணைத்தலைவர் பையாஜி ஜோஷி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மாநில முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங், பாபா ராம்தேவ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள், பா.ஜ.க. தலைவர்கள், சாமியார்கள் என முக்கிய பிரபலங்களும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்றனர்.

ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடைபெறுவதையொட்டி அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மோடி பிரதமரான பிறகு அயோத்தியில் சாமி தரிசனம் செய்வது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *