அயோத்தியில் உள்ள அனுமன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்..!
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்காக செல்லும், பிரதமர் மோடி முன்னதாக அங்குள்ள அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
அயோத்தி, ஆகஸ்ட்-5

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவுக்கு சாமியார்கள், விஐபி.க்கள் உட்பட 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பிரதமர் மோடியும் இன்று முதலில் அனுமன் கார்ஹியில் வழிபாடு செய்தபின்னரே பூமி பூஜையில் பங்கேற்கிறார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி லக்னோ சென்றடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி சென்றடைந்தார். முதல் நிகழ்ச்சியாக, அயோத்தியில் அமைந்துள்ள அனுமன்கார்ஹியில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். அவருடன் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.
அனுமன் கோவிலில் பிரதமர் மோடிக்கு வெள்ளி கிரீடம், சால்வை அணிவிக்கப்பட்டது. அனுமன் கோயிலில் பிரதமர் மோடி 10 நிமிடம் சாமி தரிசனம் செய்து, அனுமனுக்கு தீப ஆராதனை நடத்தினார். அயோத்தி ராமஜென்ம பூமி செல்லும் முன்பு அனுமன் கோயிலுக்கு செல்வது பாரம்பரியம் என்பது குறிப்பிடத்தக்கது.