”விருந்தினர்களை வரவேற்கிறேன்”-தமிழில் பேசிய பிரதமர் மோடி

சென்னை, அக்டோபர்-12

சென்னை சந்திப்பின் மூலம் உருவாகியுள்ள தொலைநோக்கு பார்வை, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய அத்தியாயம் படைக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் இடையே முறைசாரா உச்சிமாநாட்டின் பேச்சுவார்த்தை நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது நாள் பேச்சுவார்த்தை கோவளத்தில் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ரிசார்ட்டில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, கிண்டியில் இருந்து கோவளம் ரிசார்ட்டுக்கு ஜின்பிங் சென்றார். கோவளம் ரிசார்ட் சென்றடைந்த ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் உரையாடியபடியே பேட்டரி காரில் பயணித்து, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கண்ணாடி அறையை சென்றடைந்தனர்.

மொழிபெயர்ப்பாளர்கள் மட்டும் உடன் இருக்க, அங்கு இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு சீன அதிபருடன் வந்த மோடி, அவருக்கு கோவளம் கடற்கரையோர எழில் காட்சி குறித்து எடுத்துரைத்தார். பின்னர் இருவரும் சிறிது தூரம் உரையாடியபடியே நடந்துசென்றனர்.

பின்னர் இரு நாட்டு குழுவினருடன் இணைந்து தலைவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடியுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே உள்ளிட்டோர் இடம்பெற்றனர். இதேபோல, சீன அதிபருடன் அந்நாட்டு உயரதிகாரிகள் குழு பங்கேற்றது.

அப்போது சீன அதிபரை வரவேற்று பேசிய மோடி, மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன் என தமிழில் பேசினார். உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழில் நான் பேசுகிறேன் என்றார். இந்தியாவும் சீனாவும் பொருளாதார சக்திகளாக இருக்கின்றன என்றும், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே ஆழமான கலாச்சாரம் மற்றும் வணிக உறவு இருந்தது என்றும் மோடி குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *