கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழப்பா?.. உதயநிதிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை..!

தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் இறப்பு தகவலை இந்திய மருத்துவர்கள் சங்கமும் மறுத்துள்ளது. கொரோனா குறித்து வதந்திகளை சமூகவலைதளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-4

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தம் 2,08,784 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் 77.80% ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகமாக கொரோனா பரிசோதனை மையங்களைக் கொண்ட மாநிலம் தமிழகம்தான். இதுவரை 28,92,395 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 57 பேருக்கு வெற்றிகரமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 1 லட்சத்து 18 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா தொற்றால் 44 மருத்துவர்கள் உயிரிழந்ததாக ட்வீட் செய்துள்ளார். இது மிகவும் தவறான தகவல். இந்திய மருத்துவச் சங்கம் இந்த தகவலை மறுத்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர். இதுபோன்ற தகவல்கள் அவர்களது மன உறுதியை குலைப்பதாக உள்ளது. எனவே, சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பாதீர்கள். அவ்வாறு பரப்புபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *