ராமர் கோவில் விழா.. காங்கிரஸ் கட்சியில் இருந்து முதல்முறையாக ஆதரவு..!!
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையிலான விழா என்று உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் சீனியர் தலைவர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
டெல்லி, ஆகஸ்ட்-4

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து சுமார் ஓராண்டாகும் நிலையில் நாளை அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை துவக்கி வைக்கிறார்.
இந்த நிலையில், பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், எளிமை, வீரம், பொறுமை, தியாகம் மற்றும் கொண்டகொள்கையை முடிக்கக்கூடிய தீரம் ஆகியவை ராமபிரானின் குணாதிசயங்கள் ஆகும். நமது ஒவ்வொருவருக்குள்ளும் ராமர் இருக்கிறார், ஒவ்வொருவருடனும் ராமர் இருக்கிறார். ஒற்றுமை தினம் ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் பிறந்த அயோத்தியில், கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெறுகிறது. ராமபிரானின் ஆசியுடன், இந்த விழா, தேசத்தின் ஒற்றுமை, நட்புறவு மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்புக்காண நிகழ்வாக மாறவேண்டும் என்று விரும்புகிறேன். உலகத்தின் நாகரீகத்தில் அழிக்கமுடியாத தடத்தை ராமாயணம் பதித்துள்ளது. இந்திய துணைக்கண்டத்தில் ராமாயணத்தின் கலாச்சார தாக்கம் அளப்பரியது. பல ஆண்டுகளாக இந்திய துணைக்கண்டத்தில் ராமபிரானின் குணாதிசயம் ஆதிக்கம் செலுத்துகிறது. நம் அனைவருக்கும் ராமபிரான் உரித்தானவர். ஒவ்வொருவருடைய நலத்தையும் நாடுபவர் ராமபிரான். இதனால்தான், அவர் ‘மரியாத புருஷோத்தம்’ என்று அழைக்கப்படுகிறார். இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக காங்கிரஸ் தலைமை அல்லது காந்தி குடும்பத்திலிருந்து வெளிப்படையான ஆதரவு குரலொன்று வெளியாகியுள்ளது இது தான் முதல் முறை என்பது, குறிப்பிடத்தக்கது.