மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீடை நடப்பாண்டே அமல்படுத்த உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!!

மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.

டெல்லி, ஆகஸ்ட்-4

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.
மருத்துவ படிப்பிற்காக தமிழகத்தால் மத்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்படும் மருத்துவ இடங்களில் 50 சதவீதம் தமிழக ஓ.பி.சி. மாணவர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமின்றி சில மருத்துவர்கள் சார்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலை கருதி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறினர். ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர சுப்ரீம் கோர்ட் தான் முடிவு செய்யும் என்ற மருத்துவ கவுன்சில் விளக்கத்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசோ அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலோ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் தங்களின் வாதங்களை கேட்காமல் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் ஏற்கனவே கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. திமுக சார்பில் டி.டி.எஸ். இளங்கோவன் இந்த கேவியட் மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் தமிழக அரசு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், நடப்பாண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *