பாஜகவில் இணையவில்லை..திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் பேட்டி..!!

பாஜகவில் இணையவில்லை என்று திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் விளக்கமளித்துள்ளார்.

டெல்லி, ஆகஸ்ட்-4

சென்னை மேற்கு மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக இருந்த ஜெ. அன்பழகன் ஜூன் 10ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்குப் பின் அப்பதவிக்கு யார் என்று திமுகவுக்குள் கடும் போட்டி நிலவியது. இதில், ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவரும், ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவருமான கு.க. செல்வத்துக்கு பதவி கிடைக்கும் என்று முதலிலேயே பேசப்பட்டது.

இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான சிற்றரசு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தில் பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. சில நாட்களுக்கு முன் சிற்றரசு நடத்திய அறிமுகக் கூட்டத்திலும் கு.க. செல்வம் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், டெல்லிக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுடன் செல்வம் சென்றார். தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா வீட்டுக்கு சென்று இருந்தார். இதையடுத்து அவர் பாஜகவில் இணைகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இணையவில்லை.

ஜேபி நட்டாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குக செல்வம், ”நாளை அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. பிரதமர் மோடியை இதற்காக பாராட்டுகிறேன். நன்றி தெரிவிக்கிறேன். அயோத்திக்கு இணையாக ராமேஸ்வரத்திலும் கோயில்களை மேம்படுத்த வேண்டும், கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். திமுகவில் உள்கட்சி தேர்தலை மு.க.ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும். கட்சியின் தலைமையில் அதிருப்தி எதுவும் இல்லை. பாஜகவில் இணைவதற்காக டெல்லிக்கு வரவில்லை. தலைவர்களை சந்திக்க மட்டுமே வந்தேன்.” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *