மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு..! முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து தள்ளிய கட்சிகள்..!!

சென்னை, ஆகஸ்ட்-3

தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே தொடரும். புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனை, வருத்தம் அளிக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழி கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ;-

மும்மொழி திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சருக்கு நன்றி என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், “தேசிய கல்விக் கொள்கை – 2020 பெயரால் வரும் மும்மொழித் திட்டத்தை எதிர்த்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி! என குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் ;-

‘’தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மும்மொழிக் கொள்கையை நிராகரிக்க தமிழக அரசு கூறியுள்ள அனைத்துக் காரணங்களும் 3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்’’ என ராமதாஸ் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ;-

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக முதலமைச்சரின் முடிவை வரவேற்று ட்விட்டரின் கருத்து பதிவிட்டுள்ளார் அந்த பதிவில்: புதிய கல்விக்கொள்கையின் ஒரு‌‌ கூறான மும்மொழி கொள்கையைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தமாட்டோம் எனும் தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன்! மாநிலங்களின் தன்னாட்சி கல்வியுரிமைகளை மொத்தமாய் பறித்து மத்தியில் அதிகாரங்களைக் குவித்து ஒற்றைப்பாடத்திட்டத்தின் மூலம் தேசிய இனங்களின் வரலாற்றை மறைக்கும் ஒற்றைமயக் கல்விக்கொள்கையை மொத்தமாய் எதிர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். என பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ;-

மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது. அதே நேரம் National Assessment Centre, PARAKH, National Testing Agency, National Curricular Framework போன்ற அமைப்புகள் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம் என கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் :-

தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்… “மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய கல்விக் கொள்கை மாநில உரிமைகளைப் பறிப்பது,அதிகாரத்தை மையப்படுத்தவது, வணிகமயமாக்கலுக்குக் கல்வியை முற்றிலும் திறந்துவிடுவது, காவிமயமாக்குவது, ஏழைகளுக்குக் கல்வியை மறுப்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டைப் புறக்கணிப்பது, வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியை இதர மொழி பேசும் மக்கள் மீது திணிப்பது, அனைவருக்கும் கல்வி என்பதற்குப் பதிலாக முதல் தலைமுறை மாணவர்களை ஒதுக்கி வைக்கவும் வடிகட்டுவதற்கும் வழிகோலுவது என்று பல்வேறு பிற்போக்கான நடவடிக்கைகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள்,கல்வித்துறை செயற்பாட்டாளர்கள் என்று அனைத்துத் தரப்பினராலும் இது நிராகரிக்கப்பட்டிருக்கிறது.கல்வியில் ஏற்படும் எந்த மாற்றமும் சமூக, பொருளாதார, கலாச்சார நடவடிக்கைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தக் காரணங்களாலேயே இந்த தேசிய கல்விக் கொள்கை முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் எனப் பலரும் கோரி வருகின்றனர்.இதன் காரணமாகவே தமிழகத்தில் பாஜக தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தக் கல்வித் திட்டத்தை நிராகரிக்கக் கோருகின்றன. திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசு இத்திட்டத்தை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். இந்தத் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளன. இந்த நிலையில், இன்று தமிழக அரசு மும்மொழித் திட்டத்தைக் கைவிட வேண்டுமெனவும், தமிழக அரசு அதை ஏற்றுக் கொள்ளாது எனவும் கருத்து சொல்லியிருப்பது வரவேற்கத்தகுந்ததே. மும்மொழிக் கொள்கை என்பது இந்தத் திட்டத்திலுள்ள கைவிட வேண்டிய முக்கியமான அம்சங்களில் ஒன்று.அதேசமயம், மாநில உரிமை, சமூக நீதி, பாலினச் சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி உத்தரவாதம் உள்ளிட்ட பல அம்சங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. இவற்றைக் கணக்கில் கொண்டு தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டுமெனவும் இந்தக் கொள்கையை கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது. மும்மொழிக் கொள்கையைக் கைவிட வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையோடு தமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்துவிடக் கூடாது என்பதை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.எனவே, இந்தக் கொள்கையை முற்றிலுமாகக் கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் மாநில அரசு இத்திட்டத்தை அமல்படுத்தாது என தமிழக அரசு, மத்திய அரசிடம் உறுதிபடத் தெரிவிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது” என கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் ;-

மும்மொழிக்_கொள்கையை ஏற்கமாட்டோம் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்திருப்பதை விசிக சார்பில் வரவேற்றுப் பாராட்டுகிறோம். அதே வேளையில், தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள பிற தீங்குகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. தேசியக் கல்விக்கொள்கையை முற்றாக மறுதலிக்க வேண்டும். உடனடியாக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தை நடத்தி மக்கள்விரோத சனாதன கல்விக்கொள்கையைத் திரும்பப் பெற வேண்டுமென மைய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- என தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *