புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு: தமிழக அரசு
புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்கவுள்ளது.
சென்னை, ஆகஸ்ட்-3

மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பிடித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. புதிய கல்விக் கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அறிக்கை வெளியிட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘‘தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே தொடரும். புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனை, வருத்தம் அளிக்கிறது.தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழி கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.