கொரோனா தடுப்பு வழிமுறைகள்; சென்னையில் செய்வதை மாநிலம் முழுவதும் பின்பற்றலாம்.. அமைச்சர் S.P.வேலுமணி யோசனை..!!

சென்னை, ஆகஸ்ட்-3

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் ;-

“ சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை மாநிலம் முழுவதும் பின்பற்றலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி யோசனை தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (03.08.2020) ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.காமராஜ் அவர்கள், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ,எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாண்டியராஜன் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1. பரிசோதனைகள் அதிகரித்தல், 2. காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், 3. வீடுகள் தோறும் சென்று வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிதல், 4. வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துதல், 5. பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கும் குடிசைப் பகுதிகளுக்கு தொண்டு நிறுவனங்களைக் கொண்டு சிறப்பு திட்டங்கள்.

  1. சென்னை சமூக களப்பணித் திட்டத்தின் மூலம் வைரஸ் தொற்று குறித்த IEC மற்றும் விழிப்புணர்வு, 7. வார்டுகளில் நடவடிக்கைகளை மேற்பார்வையிட நுண்திட்டம் (Micro level Plan), 8. வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்கள் வாகனங்களில் ஸ்கிரீனிங் மையங்களுக்கு அழைத்து செல்ல வாகன வசதி, 9. கட்டுப்பாட்டு அறை.
  2. ஆற்றுப்படுத்துதல் (counseling) அறை, 11. தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான வசதிகளை செய்தல், 12. கோவிட் பாதுகாப்பு மையங்களில் வைரஸ் தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை உட்பட தேவையான வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் வைரஸ் தொற்று சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், இதுபோன்ற வழிமுறைகள் மற்றும் சிறப்பு திட்டங்களை பிற மாவட்டங்களிலும் பின்பற்றி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தலாம் அமைச்சர் வேலுமணி யோசனை தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் ஆகஸ்டு 2 வரை 1,01,951 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 87,604 நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்சமயம் 12,190 நபர்கள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் 39,537 தெருக்கள் உள்ளன. இதில் 5,549 தெருக்களில் மட்டுமே கரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்கள் உள்ளனர். மீதமுள்ள 33,988 தெருக்களில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை.

சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள 44 மாதிரி சேகரிக்கும் மையங்கள் மற்றும் 10 நடமாடும் மையங்கள் என மொத்தம் 54 மையங்கள் உள்ளன. இதுவரை 7,10,000 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன, உலகளவில் பெரு நகரங்களில் அதிக பரிசோதனை மேற்கோண்டதில் பெருநகர சென்னை மாநகராட்சியே முதலிடம்.

சென்னை மாநகராட்சியில் 10 லட்சம் நபர்களில் 87,000 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன (87,000 test per million). நாள்தோறும் சென்னையில் மட்டும் 12,000 முதல் 15,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் 38,198 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பொதுமக்கள் அடர்த்தியாக உள்ள குடிசைப் பகுதிகளில் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் இடங்களில் தற்பொழுது குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இதுவரை 14,23,068 கபசுரக் குடிநீர் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியின் சார்பில் 18,614 படுக்கை வசதி கொண்ட கோவிட் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையைச் சார்ந்த 2,311 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களை மருத்துவமனை அல்லது கோவிட் பரிசோதனை மையங்களுக்கு அழைத்து செல்ல 289 வாகனங்கள் உள்ளன.

குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக குடிசை வாழும் மக்களிடையே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால் அவர்களோடு தொடர்பில் உள்ளவர்களை தனிமைப்படுத்த 30,000 நபர்கள் தங்கக்கூடிய மையங்கள் தயார்நிலையில் உள்ளன.

கோவிட் நோய் உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக நாளொன்றிற்கு 500 முதல் 600 காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நோய் அதிகம் கண்டறியப்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 26,632 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 15,39,385 நபர்கள் பயனடைந்துள்ளனர். இவர்களில் 81,318 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளை தொலைபேசியின் வழியாக கண்காணிக்கும் திட்டம் மாநகராட்சியின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 25,011 நபர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை சமூக களப்பணித் திட்டம் (Chennai Community Intervention Program) என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1,979 குடிசைப்பகுதிகளில் 92 தொண்டு நிறுவனங்களின் மூலம் 4,500 பணியாளர்களைக் கொண்டு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 30.50 லட்சம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், 15 எல்.இ.டி. வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு, 129 செய்திக் குறிப்புகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு மற்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளின் காரணமாக சென்னையில் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேலும் உத்வேகத்துடன் பணியாற்றி கரோனா வைரஸ் தொற்று இல்லாத மாநிலமாக மாற்றிடும் வகையில் பணியாற்றிட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அனைத்து துறை ஐஏஎஸ் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்”.

இவ்வாறு மாநகராட்சி செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தகுந்த காரணங்களைக் கொண்டு இ-பாஸ் விண்ணப்பித்தால் உடனடியாக வழங்கப்படும் எனக்கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *