அரசியல் தலைவர்களை குறி வைத்து தாக்கும் கொரோனா.. கார்த்தி சிதம்பரத்துக்கு பாதிப்பு உறுதி..!!
சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட்-3

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், சுகாதாரத்துறையினர், துப்புரவு பணியாளர்கள், அரசியல் வாதிகள் உள்ளிட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் 2,57,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,132 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரின் மகனும், சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ வழிமுறைகளை பின்பற்றுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை மட்டுமல்லாமல் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், பழனி, மதுரை, என பல இடங்களுக்கும் சென்று கொரோனா நிவாரண உதவிகளை கார்த்தி சிதம்பரம் வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.