மறுபடியும் வருகிறதா டிக் டாக்?? மைக்ரோசாப்ட் வெளியிட்ட பரபர அறிவிப்பு..!!
டிக் டாக் நிறுவனத்தை விலைக்கு வாங்குவது குறித்து தொடர்ந்து மைக்ரோசாப்ட் ஆய்வு செய்து வருகிறது.
வாஷிங்டன், ஆகஸ்ட்-3

இந்திய, சீன எல்லையான லடாக்கில் எல்லை தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து நிலவி வருகிறது. செயலிகள் மூலம் இந்தியா தொடர்பான தகவல்களை சீனா பெறுவதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அதிரடியாக சீனாவின் 59 செயலிகளை மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்தது. மத்திய அரசு தடை செய்துள்ள செயலிகளில் மிகவும் புகழ்பெற்றது டிக் டாக் செயலிதான். இதை இந்தியாவில் 50 கோடி பேர் டவுன் லோடு செய்தனர். இதேபோல், டிக் டாக் நிறுவனத்தை அமெரிக்காவில் தடை செய்ய இருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார்.
இதனால், மாற்று வழிகளை டிக் டாக் நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட் டான்ஸ் நிறுவனம் யோசிக்கத் தொடங்கியது. அதன்படி, டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை மைக்ரோசாப்ட் சி.இ.ஓ. சத்ய நாதெள்ளா சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மைக்ரோசாப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் இது தொடர்பாக மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது. ஜனாதிபதியின் கவலைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை மைக்ரோசாப்ட் முழுமையாக பாராட்டுகிறது. டிக்டாக்கை ஒரு முழுமையான பாதுகாப்பு மறுஆய்வுக்கு உட்படுத்துவதற்கும், அமெரிக்க கருவூலம் உட்பட அமெரிக்காவிற்கு சரியான பொருளாதார நன்மைகளை வழங்குவதற்கும் உறுதிபூண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.