நாணயத்தை விழுங்கிய 3 வயது குழந்தை…அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் உயிரிழப்பு..!

கேரள மாநிலம் கொச்சி அருகே ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கிய ஆண் குழந்தை ஒன்று மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சி, ஆகஸ்ட்-2

கேரள மாநிலம் கொச்சி அருகே ஆலுவா பகுதியில் உள்ள கொடுங்கலூர் என்ற இடத்தை சேர்ந்த 3 வயது ஆண்குழந்தை நேற்று காலை ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கிவிட்டது. இதனையடுத்து ஆலுவா தாலுகா மருத்துவமனை, எர்ணாகுளம் மாவட்ட மருத்துவமனை, ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றிற்கு குழந்தையை பெற்றோர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

அப்போது மருத்துவமனையில் குழந்தை சிகிச்சை நிபுணர்கள் இல்லை என கூறி குழந்தைக்கு சிகிச்சையளிக்க மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆலப்புழா மருத்துவமனையில் ‘வாழைப்பழமும், தண்ணீரும் கொடுங்கள், நாணயம் தானாக வெளியே வந்துவிடும்’ என மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். வேறு வழியின்றி குழந்தையை எடுத்துக்கொண்டு பெற்றோர் வீடு திரும்பியுள்ளனர். பின்னர் குழந்தையின் நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து பெற்றோர் குழந்தையை மீண்டும் ஆலுவா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் வேதனையடைந்த பெற்றோர் தங்கள் பகுதி கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட இடம் என்பதால் எந்த மருத்துவமனையும் சிகிச்சை அளிக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். மேலும், சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தை உயிரிழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார். குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்த காரணத்தால், குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *