கடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி…

சென்னை, அக்டோபர்-12

மாமல்லபுரம் கடற்கரையில், காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகளை கைகளால் அகற்றினார்.

சீன அதிபர் ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்த பிரதமர் மோடி, கோவளத்தில் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் என்ற ரிசார்ட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் காலை கடற்கரையில் நடைப் பயிற்சியும், உடற்பயிற்சியும் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதுதொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாமல்லபுரத்தில் எழில்மிகு கடற்கரையில், புத்துணர்ச்சியூட்டும் நடைப் பயிற்சியும், உடற்பயிற்சியும் மேற்கொண்டதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, கடற்கரையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றித் தூய்மைப் பணியில் ஈடுபட்ட வீடியோவையும் பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடைப் பயிற்சி மேற்கொண்ட படியே பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை மாமல்லபுரம் கடற்கரையில் அகற்றியதாகவும், 30 நிமிடங்களுக்கும் அதிகமாக இந்த பணியை மேற்கொண்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

கடற்கரையில் சேகரித்த குப்பைகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பொது இடங்கள் தூய்மையாகவும் நேர்த்தியாகவும் இருப்பதை உறுதி செய்வோம் என்றும், உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதை உறுதிசெய்வோம் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

கையில் எந்த ஒரு கையுறையும் இல்லாமல் பிரதமர் மோடி குப்பைகளை அகற்றியது பெரிதும் பேசப்பட்டு வருகிறது.மேலும், அவர் கால்களில் காலணியும் அணியவில்லை. பா.ஜ.க.வினர் அனைவரும், இந்த காட்சிகளை சொல்வது மட்டுமில்லாமல் செயலிலும் செய்துகாட்டுபவர் தான் மோடி என புகழாரம் சூட்டி வருகின்றனர். நெட்டிசன்கள் சிலர் பிரதமர் குப்பைகளை அகற்றும் வீடியோவை பதிவிட்டு கமெண்ட் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *