கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை.. தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்வர் எச்சரிக்கை

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-2

தமிழகத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. அதன்பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்தது. இந்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகத்தில் பல ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் ‘பேக்கேஜ்’ என்ற பெயரில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *