வாடகை தராததால் தாக்குதல்.. தீக்குளித்த பெயிண்டர் பலி.. காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
வீட்டு வாடகை தராததால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெயிண்டரை காவல் துறை ஆய்வாளர் சரமாரியாக தாக்குதல் நடத்திய நிலையில் மனமுடைந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து காவல் துறை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட்-2

திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே விநாயகபுரம் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது வீட்டில் சீனிவாசன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வாடகைக்கு வசித்து வருகிறார். பெயிண்டராக உள்ள சீனிவாசன், கொரோனா பொதுமுடக்கத்தினால் வேலையின்மை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ராஜேந்திரன், காவல்துறையில் புகார் அளிக்க, அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் பென் சாம் நேற்று சீனிவாசனிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. அப்போது சீனிவாசனின் மனைவி மற்றும் மகள் முன்னால் சீனிவாசனைத் தாக்கியுள்ளார்.
இதனால் அவமானம் தாங்கமுடியாத சீனிவாசன் நேற்று மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதையறிந்த குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சீனிவாசனை சிகிச்சைக்காக அனுமதித்தனர். 85 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் சீனிவாசன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை புழல் காவல் ஆய்வாளர் பென் சாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பிறப்பித்துள்ளார்.
