அயோத்தியில் ஆக. 5-ல் ராமர் கோவில் பூமி பூஜை விழா..! அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பு இல்லை..!!

அயோத்தியில் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் ராமர்கோவில் பூமிபூஜைக்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அயோத்தி, ஆகஸ்ட்-1

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர்கோவில் கட்ட வலியுறுத்தி 1990ம் ஆண்டு அப்போதைய பாரதிய ஜனதா தலைவர் எல்.கே. அத்வானி மிகப்பெரிய ரதயாத்திரை ஒன்றினை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணை இறுதியில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அயோத்தியில் வருகிற 5-ந்தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பூமி பூஜை விழாவில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பு விடுக்கவில்லை.

ரதயாத்திரை நடத்தி கோவில் கட்டுவதற்கு நீண்ட போராட்டம் நடத்திய அத்வானியை பூமிபூஜை நிகழ்ச்சிக்கு அழைக்காமல் புறக்கணித்தது பாரதிய ஜனதா மூத்த தலைவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி மீதும் குற்றச்சாட்டு உள்ளது. எனினும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உமாபாரதிக்கு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *