தமிழகத்தில் துயர சம்பவங்களில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி.. முதல்வர்

தமிழகத்தில் துயர சம்பவங்களில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதிஉதவி வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-1

இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம் மற்றும் வட்டம், சூரியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பழனிசாமி என்பவரின் மகன் திரு. செந்தில் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்: நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த திரு. சுப்பையன் என்பவரின் மகன் திரு. மாரிமுத்து என்பவர் விசைப்படகினை சரி செய்யும் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், வெண்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. முருகேசன் என்பவரின் மகள் செல்வி காமாட்சி என்பவர் தனது வீட்டின் அருகில் விஷப்பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கழுகேர்கடை கிராமத்தைச் சேர்ந்த திரு. அபுதாகீர் என்பவரின் மகன் திரு. சாதிக் அலி என்பவர் படிக்கட்டில் இறங்கி வரும் போது, எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின்கம்பியில் கைப்பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், நெமிலி கிராமத்தைச் சேர்ந்த திரு. தனபால் என்பவரின் மகன் திரு. ராஜன் என்கிற ராஜா மற்றும் திரு. கணேசன் என்பவரின் மகன் திரு. ஆறுமுகம் எதிர்பாராத விதமாக மின்வேலியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; பள்ளிப்பட்டு வட்டம், கொளத்தூர் துணைமின் நிலையத்தில் கம்பியாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ஆஞ்சிகான் என்பவரின் மகன் திரு. முனுசாமி என்பவர் மின் கம்பத்தில், பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், ஜெகதளா கிராமத்தைச் சேர்ந்த திரு. சசிக்குமார் என்பவரின் மகன் செல்வன் பிரவீன் என்பவர் விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; குன்னூர் வட்டம், அதிகரட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. அமாவாசை என்பவரின் மகள் செல்வி மங்கம்மா என்பவர் துணியினை உலர்த்த முற்படும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த திருமதி யசோதா என்பவரின் கணவர் திரு. பாபு என்பவர் பட்டறையில் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திரு. சீனுவாசன் என்பவரின் மகன் சிறுவன் சிபிராஜ் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்து மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *