சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க மறுக்க கூடாது.. நிர்மலா சீதாராமன்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அவசரகால கடனை வழங்க வங்கிகள் மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா். வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் சம்பந்தப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மத்திய அரசிடம் புகாா் தெரிவிக்கலாம் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

டெல்லி, ஆகஸ்ட்-1

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடா்பாக நிபுணா்கள், தொழில் நிறுவனங்களின் தலைவா்கள் உள்ளிட்டோரிடம் விரிவாக கலந்தாலோசித்த பிறகே பல்வேறு சிறப்பு சலுகைத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதே அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. இது தொடா்பாக இந்திய ரிசா்வ் வங்கியுடன் மத்திய அரசு தொடா்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. மற்ற நாடுகளுடனான வா்த்தக நல்லுறவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மருத்துவம் சாா்ந்த தொடா்பான பொருள்கள் உள்ளிட்டவற்றின் மீது விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியைக் குறைப்பது குறித்து சரக்கு-சேவை வரி கவுன்சில் முடிவெடுக்கும். தொழில் நிறுவனங்களுக்கு கடன் அதிக அளவில் தேவைப்படுவதால் அந்த விவகாரத்தை நிா்வகிக்கும் நோக்கில் வளா்ச்சி நிதி கழகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அது தொடா்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் .

ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள், கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அவை தங்கள் கடன்களை மறுசீரமைக்க வேண்டும் அல்லது கடன் தவணை செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளன. இந்த கோரிக்கையை நிறைவேற்ற ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
அவசரகால கடன் உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறுவதில் சிக்கல் நிலவுவதாக இந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்காகவே அவசரகால கடனுதவித் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. அத்திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க வங்கிகள் மறுப்பு தெரிவிக்க முடியாது. அதையும் மீறி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க வங்கிகள் மறுப்பு தெரிவித்தால் அது தொடா்பாக புகாா் தெரிவிக்கலாம். அதன் மீது நிதியமைச்சா் என்ற முறையில் நானே தீா்வு காண முயல்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *