தமிழகத்தில் அமலுக்கு வந்தது 7-ம் கட்ட ஊரடங்கு.. கடைகளை கூடுதல் நேரம் திறக்க அனுமதி..!!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய 7வது கட்ட ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சென்னை, ஆகஸ்ட்-1

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட 6-ம் கட்ட (ஜூலை 31ம் தேதி) ஊரடங்கு முடிவடைந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 29-ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஆகஸ்டு மாதம் ஊரடங்கை நீட்டிப்பதா? புதிய தளர்வுகள் அறிவிப்பதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாவட்ட கலெக்டர்கள் அளிக்கும் ஆலோசனைகள் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழு அளித்த கருத்துக்களின் அடிப்படையிலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 (ஆகஸ்ட் 31ம் தேதி) நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (2, 9, 16, 23, 30ம் தேதி) எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. மற்ற கடைகள், காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார்.

இதன்படி, தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் போதும், சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் / சென்னை மாநகராட்சி ஆணையரிடம் முறைப்படி இ-பாஸ் பெற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அனைத்து வகையான பொருட்களையும் ஆன்லைன் நிறுவனங்கள் வினியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் மளிகை கடைகள், இரவு 7 மணிவரை, அதாவது, கூடுதலாக ஒரு மணி நேரம் இயங்கலாம். கிராமங்களைப் போலவே, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளிலும் வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் சென்னையில் உணவகங்கள் 50 சதவீத இருக்கையுடன் வாடிக்கையாளர்களை உள்ளே அமர்ந்து சாப்பிட அனுமதிக்கலாம். தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் முன்பு 50 விழுக்காடு தொழிலாளர்களுடன் இயங்கியது. அது 75 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தியேட்டர்கள் ஷாப்பிங் மால்கள் ஆகியவையும் திறக்கப்படாது. 5ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *