கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரை.. அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை, ஜூலை-31

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தினசரி 6 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவருகிறது. சென்னையில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. தினசரி ஆயிரம் பேருக்கும் மட்டுமே சென்னையில் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையில் நோயின் தன்மைக்கேற்ப ஆங்கில முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், இந்திய மருத்துவ முறைகளான சித்தா மற்றம் ஆயுர்வேதா உள்ளிட்ட சிகிச்சைகளை அளிப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆரோக்கியம் என்ற திட்டத்தை 23.04.2020-ம் தேதி தொடங்கி வைத்தார். இதனையடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது.

சிறுவில்வம், திப்பிலி வேர், தலமூலம் உள்ளிட்ட 17 மூலிகைகள் அடங்கிய ஆயுர்வேத மருந்தான இந்துகாந்த கஷாயம், கடுக்காய் உள்ளிட்ட 27 பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் அகஸ்திய ரசாயணம் மற்றும் வெண்பூசணி உள்ளிட்ட 11 பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் கூஷ்மாண்ட ரசாயணம் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இவற்றை காலை மற்றும் இரவு என இருவேளை சாப்பிட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்மருந்துகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்தவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் செயல்பட்டு வரும் ஆயுர்வேத சிகிச்சை பிரிவுகளில் எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.

குழந்தைகள் மற்றம் கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி அருந்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *