ஜின்பிங்கிற்கு இளநீர் கொடுத்து உபசரித்தார் பிரதமர் மோடி!!!

சென்னை, அக்டோபர்-11

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் பாரம்பரிய புராதான சின்னங்களை பார்வையிட்டனர். அப்போது இருநாட்டு தலைவர்களும் கைகளை உயர்த்தி நல்லுறவை வெளிப்படுத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங்க் இடையேயான இரண்டாவது முறைசாரா உச்சிமாநாடு சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. வரலாற்று மிக்க இந்த சந்திப்புக்காக ஒரு மாதத்திற்கு முன்பே சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதுமட்டுமில்லாமல், சென்னை முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், 11-ம் தேதி காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். இதனை தொடர்ந்து 11-ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வந்த சீன அதிபர் ஜி கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வெடுத்தார்.

மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்கள்:

சீன அதிபரை வரவேற்க பிரதமர் மோடி கோவளத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு புறப்பட்டுச் சென்றார். இதனிடையே, கிண்டியில் இருந்து சாலை மார்க்கமாக சீன அதிபரும் மாமல்லபுரத்தை சென்றடைந்தார். மேலும், தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேஷ்டி, சட்டை, அங்கவஸ்திரத்துடன் வந்து பிரதமர் மோடி காண்போரை கவரச் செய்தார்.

நரேந்திர மோடி-ஜி ஜின்பிங்கின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு

மாமல்லபுரத்தின் ஐந்து ரதம் பகுதியில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் ஜி யும் சந்தித்தனர். சீன அதிபரை பிரதமர் மோடி கைக்குலுக்கி வரவேற்று, இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர்.

இதனைதொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் அர்ஜுனன் தபசு, ஐந்துரதம், வெண்ணை உருண்டை ஆகிய புராதான சின்னங்களை பார்வையிட்டனர். பல்லவர் கால சிற்பங்களின் தொன்மைகள் குறித்து ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி விளக்கினார். வெண்ணை உருண்டை முன்பு இரு நாட்டு தலைவர்களும் கைகளை உயர்த்தி நல்லுறவை வெளிப்படுத்தினர்.

சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக இருவரும் ஐந்து ரதம் பகுதியில் நாற்காலியில் அமர்ந்து, உரையாடினர். அப்போது, பணியாளர் கொண்டு வந்த இளநீரை ஜின்பிங்கிற்கு கொடுத்து பிரதமர் மோடி உபசரித்தார். ஐந்து ரத சிற்பங்கள் முன் நின்று மகிழ்ச்சியோடு மோடியும், ஜின்பிங்கும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

பின்னர், இரு நாட்டு தலைவர்களும் கடற்கரை கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். கடற்கரை கோவிலுக்கு சென்ற சீன அதிபரை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிரதமர் நரேந்திர மோடியை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் யு வாங் வரவேற்றார்.

இருவரும் கடற்கரை கோவிலை நடந்தபடியே சுற்றிப்பார்த்தனர். குடவரை கோவிலின் தொன்மைகள் குறித்து ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி விளக்கினார். இதனை தொடர்ந்து, கலாஷேத்ரா கலைக்குழு நிகழ்த்திய பரதநாட்டியம், கதக்களி உள்ளிட்ட பிரமாண்ட கலைநிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *