விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போது உயிரிழந்த விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை, ஜூலை-30

தென்காசி மாவட்டம் வாகைகுளத்தைச் சோ்ந்த அணைக்கரை முத்து என்பவா் வனத் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்தாா். வனத் துறையினா் தாக்கியதில் அவா் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவரது மனைவி பாலம்மாள், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து ஒத்திவைக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி ஆா்.பொங்கியப்பன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பு வழக்கறிஞா் வாதிடுகையில், அணைக்கரை முத்து தனது விவசாய நிலத்தைச் சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்தாா். அதன் காரணமாகவே அவரை வனத் துறையினா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா் என்றாா்.

அதற்கு நீதிபதி, இப்போது பிரச்னை அதுவல்ல, தமிழகத்தில் மாலை 4 மணிக்கு மேல் பிரேதப் பரிசோதனை செய்யக்கூடாது என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் இரவில் பிரேதப் பரிசோதனை செய்தது ஏன் எனக் கேள்வி எழுப்பினாா்.

அதற்கு அரசுத் தரப்பில், அணைக்கரை முத்துவின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால் விரைவாகப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, அணைக்கரை முத்துவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு மற்றும் அதன் அறிக்கையைத் தாக்கல் செய்யவும், அவா் உயிரிழந்த வழக்கு குறித்த தற்போதைய நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்யவும், திருநெல்வேலி அரசு மருத்துவமனை முதல்வா் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தார்.

இன்று காலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அணைக்கரை முத்துவின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நெல்லை, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த மூன்று மூத்த மருத்துவர்களைக் கொண்டு மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தூத்துக்குடி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தடய அறிவியல் துறை தலைவர்கள் இரண்டு பேர் பரிசோதனை செய்வார்கள் என்றும் மறுஉடற்கூராய்வு செய்யும் குழுவில் பேராசிரியர் ஒருவரும் இடம்பெற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *