நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து.. 3-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு..!

கொரோனா பொது ஊரடங்கில் இருந்து நாடு முழுவதும் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லி, ஜூலை-29

நாட்டின் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், பாதிப்பு குறைந்த பகுதிகளில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, ஜூலை 31 ஆம் தேதியுடன் பொது முடக்கம் முடிவடைய உள்ள நிலையில், 3-ம் கட்டமாக ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குப் பிறகான தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொது ஊரடங்கில் இருந்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தளர்வுகள்:-

 • நாடு முழுவதும் இரவில் தனிமனித நாடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முற்றிலுமாக திரும்பப் பெறப்பட்டது
 • ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்களை திறக்கலாம். ஆனால், அரசு அளிக்கும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
 • பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கான தடை ஆகஸ்ட் 31 வரை தொடரும்.
 • அனைத்துப் பகுதிகளிலும் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும்.
 • வந்தே பாரத் திட்டத்தின்கீழ் வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு அனுமதி.
 • நீச்சல் குளங்கள், சினிமா கூடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பார்கள், சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் தவிர மற்ற நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. ஆனால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இவைகளுக்கு அனுமதி இல்லை.
 • கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கம் தொடரும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தளர்வுகளை அறிவிப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுக்கலாம். அதே நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியத் தேவைகளுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது.
 • கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள், அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
 • அதேபோன்று கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளிலும் மாநில அரசுகள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப சில கட்டுப்பாடுகளை அறிவிக்கலாம்.
 • மேலும் பொதுவாக அனைத்து இடங்களிலும் மக்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
 • கடைகளிலும் சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
 • மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் இதற்காக மக்கள் இ- பாஸ் உள்ளிட்டவை வாங்கத் தேவையில்லை. ஆனால், இதுகுறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம்.
 • ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள், உள்நாட்டு விமான போக்குவரத்து உள்ளிட்டவைகளுக்கு மத்திய அரசு அளித்துள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
 • 65 வயதுக்கு மேல் இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு குறைந்தவர்கள் அவசியத் தேவைகளின்றி வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 • கொரோனா பாதிப்பு குறித்து அறிய ஆரோக்கிய சேது செயலியை மக்கள் பயன்படுத்த வேண்டும்.
 • இந்த வழிமுறைகளைப் பின்பற்றாமல் விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 • பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் பயணங்களின்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
 • பொது இடங்களில் தனிநபர்கள் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
 • மக்கள் அதிகளவில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடக் கூடாது.
 • இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேல் கூடக் கூடாது.
 • பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
 • பொது இடங்களில் மது அருந்துவது, பான் மசாலா, குட்கா உள்ளிட்டவற்றை அருந்தக் கூடாது.
 • முடிந்தளவுக்கு வீடுகளில் இருந்தபடியே பணி செய்வதைப் பின்பற்ற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *