நாங்குநேரி இடைத்தேர்தலில் நாடார் வாக்குகளை பிரிக்க ஹரிநாடார் போட்டி

சென்னை ஆகஸ்ட் 31

நாங்குநேரி இடைத்தேர்தலில் பனங்காட்டுப்படை மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் போது நாங்குனேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் மே 27-ந் தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நாங்குநேரி தொகுதி காலியிடமாக உள்ளது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியும் காலியாக உள்ளது.

இந்த 2 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் செப்டம்பர் கடைசியில் தேர்தல் நடத்தலாமா? என்று தேர்தல் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளது. நாங்குநேரி தொகுதியில் போட்டியிட திமுக விருப்பம் தெரிவித்துள்ளதால்,அது பற்றிய விவரம் இன்னும் முடிவாகவில்லை.

இந்த சூழ்நிலையில் நாடார் சமூக பிரமுகர்கள் சுபாஷ் பண்ணையார் மற்றும் ராக்கெட் ராஜா வழிகாட்டுதலில் நடைபெறும் பனங்காட்டுப்படை மக்கள் கட்சி நாங்குநேரி இடைத் தேர்தலில் முதல்முறையாக களம் இறங்க உள்ளது.சமீபத்தில் நெல்லை மாவட்டம் ஆணைகுடியில் நடைபெற்ற பனங்காட்டுப்படை மக்கள் கட்சி கூட்டத்தில் நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளராக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் போட்டியிடுவார் என்று ராக்கெட் ராஜா அறிவித்துள்ளார். தொகுதியில் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் நாடார் இன வாக்குகளை நம்பி பனங்காட்டுப்படை கட்சி களம் காண்கிறது.

ஹரிநாடார் போட்டியிடுவதால் நாங்குநேரி தொகுதிக்குள் சமூக ரீதியான கோஷ்டிகள் தலை தூக்க வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *