சீன அதிபருக்கு சாம்பார், ரசம், வடை, வத்தல் குளம்பு ரெடி…

சென்னை, அக்டோபர்-11

பிரதமர் மோடியுடனான இரண்டு நாள் முறைசாரா சந்திப்புக்கு தமிழகம் வந்திருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு தென் இந்திய உணவுகள் வழங்கப்படவுளன.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான முறைசாரா சந்திப்பு சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்காக இன்று நண்பகல் 2 மணியளவில் தனி விமானம் சென்னை வந்திறங்கிய சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளையும் சீன அதிபர் பார்வையிட்டார்.

இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு, பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், ஜி ஜின்பிங்கும் அர்ஜுனன் தபசு, பஞ்ச ரதங்கள், கடற்கரை கோயில் ஆகிய 3 இடங்களை பார்வையிட உள்ளனர். மேலும், அங்கு அரங்கேற்றப்படும் கலைநிகழ்ச்சிகளையும் இருவரும் கண்டு ரசிக்கின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்பு சீன அதிபரும், பிரதமர் மோடியும் இரவு விருந்தில் பங்கேற்கின்றனர். இந்த விருந்தில் தென் இந்திய உணவு வகைகள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சாம்பார், வடை, தக்காளி ரசம், செட்டிநாடு உணவு வகைகளும் சீன அதிபருக்கு பரிமாறப்படவுள்ளது. 24 வகையான தென் இந்திய உணவுகள் பரிமாறப்படுகிறது.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு மொத்தம் 6 மணிநேரம் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு சந்திப்பும் சுமார் 40 நிமிடங்கள் வரை நடக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று நடைபெறும் இந்த சந்திப்பில், இரு நாட்டு தலைவர்களுடன் சேர்த்து சீனாவின் 7 பிரதிநிதிகளும், இந்தியாவின் 7 பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். இந்த அதிகாரிகள் மட்டுமே இரவு விருந்தில் கலந்துகொள்வதற்கும் அனுமதிக்கப்படுகிறார்கள். 

இந்த அதிகாரபூர்வமற்ற சந்திப்பில் இரு தலைவர்களும் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள், பிரச்சினைகள், எல்லைப்புற சிக்கல்கள், வர்த்தகம், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து அதிகம் பேசக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை காலையில் (12.10.2019) அன்று பிஷர்மேன் கோவ் ரிசார்ட்டில் இரு தலைவர்களும் ஒருமுறை சந்தித்து பேசுகின்றனர். அந்த சந்திப்பு முடிந்தபின், நண்பகல் உணவை முடித்துக்கொண்டு சீனப் பிரதமர் ஜி ஜின்பிங் 12.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *