மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை தொடங்கியது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெறுகிறது.

சென்னை, ஜூலை-29

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில், தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பதா, வேண்டாமா அல்லது புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும். கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் தினமும் 7 ஆயிரத்தை நெருங்கியபடியே கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், மதுரை, தேனி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக பல மாவட்ட கலெக்டர்கள் முதல்வர் எடப்பாடியிடம் வலியுறுத்துவார்கள் என்றே கூறப்படுகிறது.

இன்று மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி முடிக்கும் முதல்வர் எடப்பாடி, நாளை காலை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

தற்போது, ஊரடங்கு முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் என்ன முடிவை தமிழக அரசு அறிவிக்கும் என்பதில் பொதுமக்களும், முக்கியமாக வணிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று மாவட்ட கலெக்டர்கள், நாளை மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்தி முடித்த பிறகு, நாளை மாலை முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *