சென்னையில் வெளுத்து வாங்கிய மழை..!
சென்னையில் பல பகுதிகளில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை, ஜூலை-28

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் காலை முதலே வெயில் சுட்டெரித்தது. அவ்வப்போது மேகமூட்டமாக காணப்பட்டாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் பிற்பகலுக்கு பிறகு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது.
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சென்னை போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், விருகம்பாக்கம், வடபழனி, கேகேநகர், ஈக்காட்டுத்தாங்கள், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதேபோல் புறநகர் பகுதியான மீனம்பாக்கம், பம்மல், தாம்பரம், சேலையூர், மாடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. மேடவாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூரிலும் மழை பெய்தது.

பூவிருந்தவல்லி, அம்பத்தூர், வானகரம் உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை பெய்தது. சென்னையில் இன்று 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்நிலையில் திடீரென கொட்டி தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை நீடித்தது. திடீர் கன மழையால் சென்னை சாலைகளிலும் தெருக்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் வெளுத்து வாங்கிய இந்த திடீர் கன மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.