தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?.. தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை, ஜூலை-28

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. மேலும், சூழ்நிலை காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும் ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எப்போது வெளியிடுவது என்பது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னதாக, காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள், வருகைப்பதிவு அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்கள் நிர்ணயம் வழங்கப்படும் என்றும் அதேபோன்று பெற்றோர்களின் கருத்துகளுக்கு ஏற்பவே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.