கொள்ளையன் திருவாரூர் முருகன் பெங்களூருவில் சரண்…
பெங்களூரு, அக்டோபர்-11
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டு தலைமறைவாகி இருந்த முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியின் பின்பக்க சுவற்றை துளையிட்டு பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றனர். லலிதா ஜுவல்லரியில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு துருப்புச்சீட்டாக அமைந்தது. இந்த நிலையில், லலிதா ஜுவல்லரியில் கொள்ளையர்கள் ஒவ்வொருவரும் போலீசாரின் வலையில் சிக்கி வருகின்றனர். கடந்த வாரம், திருவாரூரில் மணிகண்டன் என்பவன் கைதுசெய்யப்பட்டு, அவனிடமிருந்து 5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. அவனோடு இருசக்கர வாகனத்தில் வந்த சுரேஷ் தப்பியோடிவிட்டான். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேடப்பட்டு வந்த குற்றவாளி சுரேஷ் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரண்டைந்தான்.

இவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கொள்ளைக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் முருகன் என்பதும், இவன் மீது ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் முருகனை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், லலிதா ஜிவல்லரியின் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுடன் வந்து சரணடைந்துள்ளான். இதனையடுத்து, கொள்ளையன் முருகனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது