புதுச்சேரி முதல்வர், அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை; சட்டசபை ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி..!!

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

புதுச்சேரி, ஜூலை-28

புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்ற என்.ஆர். காங். – எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஜெயபால் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடர்ந்து 4 நாட்கள் பங்கேற்றிருந்தார். இதையடுத்து புதுச்சேரி தலைமைச் செயலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடி வைக்கப்பட்டது. இதன்பிறகு வரலாற்றில் முதன்முறையாக சட்டப்பேரவை கூட்டத் தொடர் மரத்தடியில் நடைபெற்றது. அன்றைக்கே சட்டப்பேரவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது

இதைத் தொடர்ந்து சட்டசபையில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்கான சிறப்பு முகாம் சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நேற்று நடந்தது. முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் பாலன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்தம் 126 பேருக்கு உமிழ்நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டன.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை முடிவுகளை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் அமைச்சர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.அதே போல், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் உறுதி ஆகியுள்ளது.

இருப்பினும் புதுச்சேரி சட்டப்பேரவை ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *