பாலிவுட்டில் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக அவதூறு பரப்புவதா?.. அமைச்சர் S.P.வேலுமணி கடும் கண்டனம்

சென்னை, ஜூலை-28

தமிழ் திரையுலகில் கடந்த 1992ம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான், இந்தி தொடங்கி ஆங்கிலம் வரை பல மொழிகளில் இசையமைத்து உள்ளார். ஆஸ்கார் விருது வென்ற பிறகு சர்வதேச அளவில் புகழ் பெற்ற அவருக்கு சில ஹாலிவுட் பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. சமீபத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்த தில் பேச்சாரா என்ற இந்தி படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் தொடர்பாக அண்மையில் ஒரு பேட்டியில் ஏ. ஆர். ரகுமான் தான் ஏன் பாலிவுட் படங்களில் அதிக அளவு பணியாற்ற முடியாமல் இருக்கிறது என்பது பற்றி உருக்கமாக விளக்கியுள்ளார். பாலிவுட்டில் ஒரு கும்பல் தனக்கு வாய்ப்பு கிடைப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என ஏ. ஆர். ரகுமான் வெளிப்படையாக புகார் தெரிவித்துள்ளார். அவர் இப்படி கூறியிருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில், ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் அவருக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு கண்டனமும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பதிவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியிருப்பதாவது,
பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலக அளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கார் நாயகன் திரு.ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ள கருத்து வருத்தமளிக்கும் செய்தியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,எல்லைகளில்லா இசையை எல்லைகள் கடந்து இயக்கி இந்தியாவிற்கே புகழ் சேர்த்த நமது இசைப்புயல் திரு. ஏஆர் ரகுமான் அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள். அவருக்கு என்னுடைய மனப்பூர்வமான ஆதரவை பதிவு செய்து கொள்கிறேன் என்றும் அந்த பதிவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *