ஓபிசி-இடஒதுக்கீடு தீர்ப்பு: சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி.. திருமாவளவன்

ஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்பு, சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை-27

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் (AIQ ) பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த ஆண்டு முதன்முதலாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எழுப்பினோம். இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு அந்தக் கோரிக்கைக்குக் கிடைத்த முதல்கட்ட வெற்றியாக அமைந்துள்ளது. சமூகநீதிக்கான போராட்டத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் இந்தத் தீர்ப்பைப் பாராட்டி வரவேற்கிறோம்.அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் என்பது எந்த ஒரு சட்டப் பாதுகாப்பும் இன்றி உச்சநீதிமன்றம் சொன்ன உத்தரவின் அடிப்படையிலேயே இவ்வளவு காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மருத்துவக்கல்லூரி ஏதும் இல்லாத நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய அந்த வழிகாட்டுதல் இப்போது பொருத்தமற்றதாக விட்டது. அதுமட்டுமில்லாமல் சமூகநீதியை மறுப்பதற்கும் பட்டியலின, பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டைப் பறிப்பதற்கான கருவியாகவும் அது ஆக்கப்பட்டுவிட்டது.

பிற்படுத்தப்பட்டோருக்கு இதிலே முழுமையாக இட ஒதுக்கீடு என்பது வழங்கப்படாத நிலை இருந்தது. இதை சுட்டிக்காட்டி பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மத்திய சுகாதார அமைச்சரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளித்தோம் . நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்சனையை எழுப்பினோம் அதன்பின்னரே பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்தனர். இந்த கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத மத்திய அரசு , உச்சநீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டி அதனால் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று நிராகரித்து வந்தது. இன்று தீர்ப்பளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ”பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை; மாநிலத்தில் அளிக்கப்படும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அவர்களுக்கு வழங்கலாம் என மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்; மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமின்றி பிற மருத்துவக் கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றம்தான் ஆணையிட வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ) முன்வைத்த வாதம் ஏற்புடையதல்ல” என்று தெளிவாகக் கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி அடுத்த கல்வி ஆண்டில் இந்த இட ஒதுக்கீட்டை வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்து முடிவு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைக்க வேண்டும் அதில் தமிழக அதிகாரிகளும் இடம் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளது.இந்த வழக்கின் போது எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு மாநிலங்களிலுள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. தற்போது மத்திய அரசு 15 %ம் எஸ்சி பிரிவினருக்கும் 7.5% எஸ்டி பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கிவருகிறது. இந்தியாவிலுள்ள 16 மாநிலங்களில் 15 விழுக்காட்டுக்கு மேல் எஸ்சி பிரிவினரின் மக்கள்தொகை உள்ளது. அதுபோலவே எஸ்டி பிரிவினரின் மக்கள் தொகை 7.5%க்கும் மேல் உள்ளது. அங்கெல்லாம் அவர்களுக்குச் சேர வேண்டிய இடங்கள் கிடைக்காமல் போகிறது. எனவே இட ஒதுக்கீட்டை மாநில அளவில் தான் கணக்கிட்டு முடிவு செய்ய வேண்டும் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன .மத்திய அரசு புதிதாக இயற்றும் சட்டத்தில் இந்த அம்சங்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் அகில இந்திய ஒதுக்கீடு என்பது இப்பொழுது பொருத்தமற்றதாக இருக்கிறது. மாநில உரிமைகளைப் பறிப்பதாக இருக்கிறது. அது தேவையில்லை. அவ்வாறு நீடிக்க வேண்டுமென்று சொன்னால் அதற்கான ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று வாதிட்டோம். உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் எழுப்பியிருந்த அந்த வாதம் இன்று உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் உறுதிப்பட்டுள்ளது. சட்டரீதியான அங்கீகாரம் ஏதுமின்றி 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டிருந்த அகில இந்திய ஒதுக்கீடு என்பது இனிமேலும் தொடரக்கூடாது அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு சரியானது ஆகும். இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்வதாகவும் உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

நீதிமன்றங்களை காரணங்காட்டி இதுவரை பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மருத்துவ படிப்பில் இழைத்து வந்த அநீதியை இனியாவது மத்தியில் ஆளும் பாஜக அரசு மாற்றிக் கொள்ளும் என்று நம்புகிறோம். இதுதொடர்பாக உருவாக்கப்படும் சட்டத்தில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு தற்போது இழைக்கப்பட்டுவரும் அநீதியும் களையப்பட்டு அவர்களுக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும். அதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *