ஸ்டாலினின் அரசியல் நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள்.. ஓபிசி இட ஒதுக்கீடு தீர்ப்பு குறித்து எல்.முருகன் அறிக்கை..!

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உயர்வுக்காக பாடுபட்டது பாரதிய ஜனதா கட்சியே எனவும், ஸ்டாலினின் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை-27

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு :-

பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு சலுகைகள் வழங்கும் நோக்கத்தோடு 1953ல், காக்கா கலேஷ்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட ஆணையம் 2399 சாதியினரை பிற்படுத்தப்பட்டோர் எனவும், 837 சாதியினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனவும், 1995ல் அறிக்கை தாக்கல் செய்தது. ஜவஹர்லால் நேரு அரசு, 6 ஆண்டுகள் இந்த அறிகையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, 1961ல் தள்ளுபடி செய்தது. அதன் பின்னர் 17 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில், பிற்படுத்தப்பட்டோரை கண்டுகொள்ளவே இல்லை. பின்னர் ஜன சங்கத்தின் ஆதரவோடு 1977ல் மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். அப்போது B.P.மண்டல் தலைமையில், 1979ல், பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டாவது ஆணையத்தை நியமித்தார். அந்த ஆணையம், 31-12-1980ல், 3543 பிரிவினரை பிற்படுத்தப்பட்டோர் என்று அடையாளம் கண்டு அறிக்கை தாக்கல் செய்தது.

முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும், ராஜிவ் காந்தியும், இந்த மண்டல் அறிக்கையைத் தொட்டுகூடப் பார்க்கவில்லை. பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் 88 எம்.பிக்கள் ஆதரவோடு ஆட்சி அமைத்த வி.பி.சிங் அவர்கள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணிகளில், 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார். அன்று பா.ஜ.க ஆதரவு அளித்திருக்காவிட்டால், இத்தகைய சலுகை பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்காமலேயே போயிருக்கும். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததுடன், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்திட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அதன் அடிப்படையில், 1993ல் நரசிம்ம ராவ் அவர்கள் பிரதமராக இருந்த போது, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த அமைப்பிற்கு எந்தவித அரசியலமைப்பு அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து, அங்கீகாரம் வழங்கக் கோரி, 25 ஆண்டு காலமாக இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் போராடி வந்தனர். இந்த கால கட்டத்தில், திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி ஆட்சியில் இருந்தன. இவர்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் கோரிக்கையை கடைசி வரை , இவர்களின் ஆட்சி முடியும் வரை கண்டு கொள்ளவே இல்லை. ஆனால், பாரதப் பிரதமர், நரேந்திர மோடி அவர்கள், அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா 123/201ஐ கொண்டு வந்து, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, சட்ட ரீதியான, அரசியலமைப்பு ரீதியான , முழுமையான அங்கீகாரத்தை வழங்கினார். மாநிலங்களவையில் இந்த மசோதாவை திமுக தோற்கடித்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

பிற்பட்ட சமூகத்திற்கு கல்வி, வேலை வாய்ப்பு, இவற்றில் 27 சதவீத இட ஒதுக்கீட்டில், கிரீமி லேயருக்கான வருவாய் உச்ச வரம்பு 6 லட்சமாக இருந்ததை, மோடி அவர்கள் 8 லட்சமாக உயர்த்தினார். திமுக, காங்கிரஸ் கூட்டணியில் 1993 முதல் 2014 வரை, 20 ஆண்டுகளில் ரூபாய் 1 லட்சமாக இருந்த உச்ச வரம்பை, ரூபாய் 6 லட்சமாக மட்டுமே மாற்றின. ஆனால் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த 3 வருடத்திலேயே ரூபாய் 8 லட்சமாக உயர்த்தினார். இப்போது பாஜக அரசு , உச்ச வரம்பை உயர்த்தவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கபட நாடகம் ஆடுகிறார். இதற்கு முன் இல்லாத வகையில், கேந்திர வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அளித்துள்ளார். மருத்துவ மேற்படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கீடு அளிக்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவறான பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 04—01-2007 அன்று, காங்கிரஸ், திமுக, பாமக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தது.

அது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று குறிப்பிட்டதுடன், மாநில அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் , அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளித்து உத்தரவு பிறப்பிக்காதது ஏன்?. மேலும் 2014 வரை எந்த வழக்கும், தடையும் இல்லாத நிலையில், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்து வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருந்தது ஏன்? என்று நான் திமுகவை பார்த்து கேட்கிறேன். இன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்ட விவரங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு தரப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில், இட ஒதுக்கீடு வழங்க அளிக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது. 2015ல் உச்ச நீதிமன்றத்தில், சலோனிகுமார் என்பவரால், தொடரப்பட்ட வழக்கில், தங்களை இணைத்துக் கொள்ளாமல், ஒதுங்கி வேடிக்கை பார்த்துவிட்டு, இப்போது மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய கலந்தாய்வு கூட்டம், கடந்த ஏப்ரல் மாதமே முடிந்துவிட்ட நிலையில், திடீரென்று தடை கோரி வழக்கு தாக்கல் செய்திருப்பது உள்நோக்கம் கொண்ட அரசியல் நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள்.

உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் இது குறித்து நடைபெறும் வழக்குகளில், மத்திய அரசு, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்து, பிரமாண வாக்குமூலம் சமர்ப்பித்துள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணிகள் , செய்த துரோகம் வெளிவந்துவிடும் என்ற எண்ணத்தில், இப்போது பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, திமுகவும், அதன் தலைவர் ஸ்டாலின் அவர்களும் மக்களிடம் தவறான பொய்ப் பிரச்சாரம் செய்வதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *