தமிழகம் வந்த சீன அதிபருக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு

சென்னை, அக்டோபர்-11

இந்தியா-சீனா இடையேயான நல்லுறவை மேம்படுத்த கடந்த ஆண்டு பிரதமர் மோடி சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக சீன அதிபர் இந்தியா வந்து பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது.

பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச இரு நாட்டு அதிகாரிகளும் முடிவு செய்து கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகள் செய்தனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தார். சீன தலைநகர் பிஜிங்கில் இருந்து தனி சிறப்பு விமானத்தில் புறப்பட்ட ஜி ஜின்பிங் நேரடியாக சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

சீன அதிபரை விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் வரவேற்றனர்.

அதன்பிறகு சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற பரதநாட்டியம், ஒயிலாட்டம், கரகாட்டம், செண்டை மேளம் போன்ற பாரம்பரிய கண்கவர் கலை நிகழ்ச்சிகளை சீன அதிபர் ஜி ஜின்பிங் கண்டு ரசித்தார். இதனைதொடர்ந்து அவர், கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *