3 நகரங்களில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை தொடங்கி வைத்தார் மோடி

மும்பை, கொல்கத்தா மற்றும் நொய்டாவில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

டெல்லி, ஜூலை-27

கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, மகாராஷ்டிர மாநிலம் மும்பை, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா மற்றும் உத்தரபிரதேசத்தின் நொய்டா ஆகிய 3 இடங்களில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை அமைத்துள்ளது.
இந்த மையங்களை காணொலி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திரமோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ்தாக்கரே, மேற்கு வங்காளம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பங்கேற்றனர்.

பரிசோதனை மையங்களை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி ‘‘இந்தியாவில் சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்பட்டதால் பாதிப்பு குறைவாக உள்ளது. உயிரிழந்தோர் சதவீதம் இந்தியாவில்தான் மிகவும் குறைவாக உள்ளது. கொரோனா சிகிச்சைக்காக 11 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது’’ என்றார்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், முடிவுகளை உடனடியாக அறியும் வகையிலும் அதிநவீன பரிசோதனை மையங்கள் செயல்படவுள்ளன. இந்த மையங்கள் மூலம் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும், 24 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த பரிசோதனை மையங்களில், கொரோனாவை தவிர வேறு நோய்களுக்கான பரிசோதனைகளையும் மேற்கொள்ளலாம். ஹெபடைடிஸ் பி மற்றும் சி, எச்.ஐ.வி, மைக்கோபாக்டீரியம் காசநோய், சைட்டோமெலகோவைரஸ், கிளமிடியா, நைசீரியா, டெங்கு போன்றவற்றுக்கு சோதிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *