மகள்களை ஏரில் பூட்டி நிலத்தில் உழவு செய்த விவசாயி.. இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சோனுசூட்..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஏர் உழுவதற்கு மாடுகளை வாங்க காசு இல்லாததால் விவசாயி ஒருவர் தனது இரு மகள்களையும் மாடுகள் போல் பூட்டி ஏர் உழுத வீடியோ வைரலான நிலையில் அவருக்கு நடிகர் சோனு சூட் டிராக்டர் வாங்கி கொடுத்துள்ளார். இந்த டிராக்டரை பார்த்து விவசாயியின் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மும்பை, ஜூலை-27

கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பருவ மழை பொய்த்து போவதாலும், விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஆந்திராவில் விவசாயி ஒருவர் மாடுகளுக்கு பதில் ஏரில் தன் இரு மகள்களை நிலத்தில் பூட்டி உழவு செய்தார்.
ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் மஹால்ராஜூவாரிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நாகேஸ்வர ராவ். கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வரும் இவர் திருப்பதியில் டீக்கடை நடத்தி வந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் அந்த கடையில் வருமானம் ஈட்ட முடியாததால் விவசாயம் செய்ய முடிவு செய்தார். அதனால் அவர் தன் கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிரிட திட்டமிட்டார்.

உழவு மாடுகள் வாங்க பணமில்லாததால் தன் இரு மகள்களை ஏரில் பூட்டி நிலத்தில் உழவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதை பார்த்த இந்தி நடிகர் சோனு சூட் மனவருத்தம் அடைந்து அவருக்கு உதவி செய்ய முன்வந்தார். இதுதொடர்பாக சோனு சூட் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், வயலில் உழவு செய்வதற்கு விவசாயிக்கு இரு உழவுமாடுகளை தானமாக அளிக்க உள்ளேன். தந்தைக்கு உதவி செய்த பெண்களை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், மாடுகளுக்கு பதிலாக மகள்களை வைத்து நிலத்தை உழுத ஆந்திர விவசாயிக்கு இந்தி நடிகர் சோனு சூட் டிராக்டர் வாங்கி தந்துள்ளார். நேற்று மாலை விவசாயியிடம் அந்த டிராக்டர் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு விவசாயி குடும்பத்தினர் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

நடிகர் சோனு சூட் இந்த லாக்டவுனால் மும்பை உள்ளிட்ட நகரங்களில் சிக்கித் தவித்து வந்த தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் சொந்த மாநிலம் செல்ல தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். தற்போது அவர் விவசாயிக்கும் உதவி செய்வது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீங்கள்தான் உண்மையான ஹீரோ என்றும் சோனு சூட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *