மன் கி பாத் நிகழ்ச்சியில் நாமக்கல் மாணவி கனிகாவிடம் பிரதமர் மோடி என்ன பேசினார் தெரியுமா?
பொதுமக்களுடன் உரையாடும் மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று நாமக்கல் மாணவி கனிகாவுடன் பிரதமர் மோடி பேசினார்.
நாமக்கல், ஜூலை-26

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அந்த வகையில் இன்று நடைபெற்ற ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா பாதிப்பு, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் கார்கில் வெற்றி தினம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மோடி பேசினார்.
பின்னர் பொதுமக்களுடனான உரையாடலின்போது தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கனிகாவிடம் பிரதமர் மோடி பேசினார். அப்போது, நாமக்கல் என்றால் ஆஞ்சநேயர் கோவில் தான் ஞாபகம் வரும், இனி உங்கள் ஞாபகம் வரும் கனிகா, என மோடி குறிப்பிட்டார்.
மாணவி கனிகா, சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 490 மதிப்பெண் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி 67-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியின் போது சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து என்னிடம் பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று நாமக்கல் மாணவி என்.என்.கனிகா தெரிவித்தார்.
மாணவி கனிகா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மன் கீ பாத் நிகழ்ச்சி தொடர்பாக பிரதமர் அலுவலகத்தை நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை. எதார்த்தமாக பிரதமர் அலுவலகத்திலிருந்து செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட அலுவலக அதிகாரிகள் சிறிது நேரத்தில் பிரதமர் மோடி உங்களிடம் பேசுவார் என தெரிவித்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த நான் அவரது குரலை கேட்க எதிர்பார்த்திருந்தேன். சிறிது நேரத்தில் பேசிய பிரதமர் சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் தேர்வில் வெற்றி பெற்றதற்கு முயற்சித்தது பற்றியும், எதிர்கால லட்சியம் என்ன என்பது குறித்தும் என்னிடம் கேட்டறிந்தார்.
மேலும் எனது சகோதரி ஷிவானி மருத்துவம் படித்து வருவதையும் பிரதமர் பாராட்டினார். ஏழை குடும்பத்தில் இருந்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் மிக நல்ல முறையில் நாட்டிற்கு சேவை ஆற்ற முடியும் என்றும் அப்போது கூறினார். தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், ‘நாமக்கலைப் பற்றி நான் கேட்கும்போது, ஆஞ்சநேயர் கோவில் ஞாபகம் வரும். இனி நாமக்கலை நினைவு கூர்ந்தால் உங்கள் ஞாபகமும் வரும்’ என்று தெரிவித்தது மகிழ்ச்சியாக இருந்தது என கனிகா கூறினார்.