பிரதமர் வீட்டு முன் போராட்டம்.. ராஜஸ்தான் முதல்வர் கெலாட் எச்சரிக்கை
தேவைப்பட்டால் பிரதமர் வீட்டு முன் போராட்டம் நடத்துவோம் என்று ராஜஸ்தான் முதல்வர் கெலாட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெய்ப்பூர், ஜூலை-25

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக செயல்பட்டதால், அம்மாநில துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
இதை எதிர்த்து, சச்சின் பைலட் தரப்பினர், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த, உயர்நீதிமன்ற ஜெய்ப்பூர் கிளை நீதிபதிகள், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது. மேலும், இந்த வழக்கில் மத்திய அரசையும் ஒருதரப்பாக சேர்க்கவும் நீதிபதிகள் அனுமதியளித்தனர்.
இதனால், சச்சின் பைலட் உள்ளிட்டோர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என ஆளுநருக்கு, முதலமைச்சர் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது தன்னிடம் அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால் ராஜஸ்தான் மாநில சட்டசபையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சியில் கெலாட் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், ஜெய்ப்பூரில் தனியார் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள தனது ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அசோக் கெலாட் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்மந்திரி கெலாட்,’தேவைப்பட்டால் நாம் டெல்லி ராஷ்டிரபதிபவன் சென்று குடியரசுத்தலைவரையும் சந்திப்போம். மேலும், தேவைப்பட்டால் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம் முன்பு நாம் போராட்டத்திலும் ஈடுபடுவோம்’ என்றார்.