தமிழகம் முழுவதும் நாளை எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

சென்னை, ஜூலை-25

தமிழகத்தில் ஜூலை முதல் வாரத்துடன் பொது முடக்கம் தளர்த்தப்பட்டாலும், ஜூலை 31-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் பொது முடக்கம் நீடிக்கப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு எந்தவித தளர்வுமின்றி முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நாளை தமிழகம் முழுவதும் தளர்வுகள் இன்றி முழுப் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று காய்கறி மற்றும் இறைச்சி, மீன் சந்தைகளில் ஏராளமான கூட்டம் அலைமோதுகிறது. ஜூலை மாதத்தின் கடைசி ஞாயிறு என்பதால் இது கடைசி ஊரடங்கு நாளாகவும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருக்கும். அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும், ஆம்புலன்ஸ்களுக்கும், மருத்துவ சிகிச்சைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் வாகனங்களுக்கும், அமரர் ஊர்திகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் எந்தத் தடையும் இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் செய்தி சேகரிக்க செல்லவும் தடை இல்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே, நாளை (ஞாயிற்றுக்கிழமை) பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் வாகனங்களை தடை செய்யக்கூடாது என்று போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *